யாரும் சொல்க்கொடுக்காமலே எத்தனை விஷயங்களைக் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள்! எல். கெ. ஜி. படிக்கும் குழந்தை, பள்ளி சென்ற ஓரிரு மாதங்களில் ஆசிரியையைப் போலப் பேசுவதும் அபிநயம் பிடிப்பதும் எவ்வளவு தத்ரூபமாக இருக்கிறது.
கொஞ்சம் பெரியதாகும்போது “ஏதேனும் ஒரு பிரச்சனையை மக்களிடம் பேசினால் “நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்று எனக்குத் தெரியும்’’ என்று நம்மை வியப்பலாழ்த்துகிறார்கள்.
செஸ் விளையாட்டில் வரப்போகும் பத்துப்பதினைந்து ஆட்டங்களின் வாய்பப்புகளை யோசித்து அதற்கேற்ப வியூகம் அமைப்பது போல், மகள் வாதம் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் எப்போதும் புத்திசாகளும்
திறமைசாகளும்தான். நம்மைவிட!!
இத்திறமைகளில் ஒன்று “நாம் சொல்லும் வாக்கியத்தில் மறைந்திருக்கும் மறைபொருளைக் கண்டுபிடிப்பது”
“உன்னை இப்பத்தான் நெனச்சேன்’’ என்று கணவன் சொன்னால் அப்படியானால் இத்தனை நேரமும் வேறு யாரையோ
நினைத்துக்கொண்டிருந்தீர்கள், அப்படித்தானே என்று மனைவி கேட்பதை மறைபொருள் கண்டுபிடிப்பதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
இப்போது குழந்தைகளுடன் பேசும் கலந்துரையாடலை எடுத்துக்கொள்வோம்.
“ஆகா, மிகச் சிறப்பாக இருக்கிறது. நன்றாகச் செய்திருக்கிறாய்’’ என்று மகளிடம் பேசினால் உண்மையில் அது எதைக் காட்டுகிறது? “நீ இப்படி செய்வாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை’’ என்று சொல்லாமல் சொல்கிறது அல்லவா?
“இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் அதிக மதிப்பெண் கிடைத்திருக்கும்’’ என்றால் என்ன பொருள்?
“இப்போது முயற்சி செய்தது போதாது. நீ உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்யவில்லை. உன் திறமையை தேர்வில் எப்படிக் காட்டுவது என்று தெரியவில்லை. நான் எவ்வளவு மதிப்பெண் எடுத்தாலும் நீங்கள் இதையேதான் சொல்வீர்கள்’’ போன்ற கருத்துக்களையெல்லாம் அந்த ஒரு வாக்கியம் சொல்லாமல் சொல்கிறதல்லவா?
படித்துக்கொண்டிருக்கும் குழந்தையைப் பார்த்து, “ஓ... படிக்கிறாயா?” என்று கேட்பது, எவ்வளவு மோசமான எண்ணத்தைக் குழந்தைகள் மனதில் ஏற்படுத்தும் என்பதை நினைத்துப்பாருங்கள். இப்படி யோசித்தால் குழந்தைகளிடம் பேசவே முடியாதே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. பேச முடியாததுதான். அமைதியாக இருந்தாலும் நம் அருகாமையை அவர்கள் உணரும்படி நம் முந்தைய நடவடிக்கைகள் அமைந்திருந்தால் பேசாமல் இருக்கலாம். அப்படி இல்லை பேசவேண்டும் என்று நினைத்தால் ஒரு நிமிடம் யோசித்தபின் பேசுங்கள்.
இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படி யோசிப்பதெல்லாம் “ரொம்ப அதிகம்’’ என்று நினைக்கிறீர்களா? உங்களிடம் ஒரு கேள்வி? ஒருவர் பேசுவதைப் பத்துப்பேர் கேட்கிறார்கள். ஆனால் அப்பத்துபேரும் அவர் கூறிய
கருத்தை ஒரேபோல் புரிந்துகொள்வார்கள் என்று உறுதியளிக்க முடியுமா? அப்படி எங்கேனும் நடக்கிறதா? அப்படி நடந்திருந்தால் உலகில் இத்துணை குழப்பங்களும் ஏற்பட்டிருக்காது அல்லவா?
கேட்பவர்களின் முன் அனுபவங்கள், புரிதல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த முன்னனுபவத்தைப்புரிந்து கொள்ளாமல் ஒருவர் பேசினால் அவர் பேச்சு காற்றோடு போய்விடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
இப்போது நம் குழந்தைகளைப் பற்றிப் பார்ப்போம். அவர்களுக்குப்பள்ளியில் ஏற்பட்ட அனுபவம் என்ன? அவர்கள் என்ன வாசிக்கிறார்கள்? தொலைக்காட்சியில், என்ன பார்க்கிறார்கள்? நண்பர்களுடன் என்னென்ன பேசுகிறார்கள், எங்கெங்கு போகிறார்கள்...என எதுவுமே தெரியாத நாம் ஒரு கருத்தைச் சொன்னால் எப்படியிருக்கும்?
எனவே குழந்தைகளிடம் பேசுவதற்கு முன் யோசியுங்கள். நன்றாக யோசித்தால் பேசுவது குறையும், வேறு சுவையான விஷயங்கள் பேசுவதற்கு நேரம் கிடைக்கும்...
(தொடர்ந்து கற்போம்...)